Wikipedia

Search results

Tuesday, March 22, 2016

கறுப்பு என்றால் ஏன் வெறுப்பு?

'நம்ம ஊரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த்தும் கறுப்புதான்... கறுப்புதான் அழகு! ' என ஒருபக்கம் கறுப்பைக் கொண்டாடுகிறது தமிழ் சினிமா. இன்னொரு பக்கம் ரஜினியே, 'இப்போ நான் செக்கச் செவப்பே!' எனப் பாடுகிறார். சமூகத்தின் அத்தனை அடுக்குகளிலும் கறுப்புக்கான நிராகரிப்பு இருப்பது ஏன்? கல்வி தொடங்கி காதல் வரை, நூற்றாண்டுகளைத் தாண்டி நீள்கிறது கறுப்பு நிறத்தின் கவலை வரலாறு!
''ஆரியர்கள், இஸ்லாமியர்கள், ஐரோப்பியர்கள் என்று தொடக்கத்தில் இருந்தே நம்மை ஆண்டவர்கள் எல்லோருமே நம் சராசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த
நிறமுடையவர்கள். தமிழ்நாட்டில் 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு அரசியல் அதிகாரத்தையும் சித்தாந்தத்தையும் உயர்த்திப் பிடித்த ஆன்மிக அதிகாரம், சிவந்தவர்களின் கைகளில் இருந்தது. எனவே, சிவப்பு என்பது அதிகாரம், உயர்ந்த ஆன்மிகம், மேட்டிமையின் சின்னமாக, அழகின் அடையாளமாகக் காட்டப்பட்டது. பெருவாரியான கறுப்பு நிறமுடைய மக்கள், ஆளத் தகுதியற்றவர்களாக வும், அழகு குறைந்தவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப் பட்டனர். அது இப்போதும் தொடர்கிறது!'' என்கிறார் சமூக -பண்பாட்டு ஆய்வாளரான தொ.பரமசிவம்.
அவரவர் நிறமே அவரவரின் அடையாளமும் அழகும் என்பதை மறந்துபோய் குழந்தைகளின் மனதிலேயே கறுப்பு காம்ப்ளெக்ஸ் உருவாக்கப்படுவதே கொடுமை.
''மூன்றாம் வகுப்பு படிக்கிற ஒரு குழந்தையை என்னிடம் அழைத்து வந்தார்கள். அவள் கறுப்பாக இருக்கிறாள் என்ற காரணத்துக்காக பள்ளியில் நடக்கும் டான்ஸ் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளவில்லையாம். இங்கே கவுன்சிலிங் தேவைப்படுவது அந்தக் குழந்தைக்கா அல்லது அவளின் ஆசிரியர்களுக்கா என்பதுதான் கேள்வி! 'சிவப்பாக இருப்பவர்கள் ஹை ஸ்டேட்டஸ்' என்ற புரிதல் படித்த, படிக்காத எல்லா தரப்பு மக்களிடமும் இருக்கிறது என்பதுதான் வேதனை'' என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.
''நண்பர்களுடன் செல்லும்போது, 'நாம கறுப்பா இருக்கோமே!'ங்கிற தாழ்வுமனப்பான்மை வர்றதைத் தவிர்க்கவே முடியலை. அழகா, கலரா பெண்கள் கடந்து போனா, எந்தப் பொண்ணும் நம்மைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்களான்னு ஏக்கம் வருது. கறுப்பா இருக்கிறதால, 'தார் டின்', 'ப்ளாக்கி', 'காக்கா'ன்னு நிக் நேம் வெச்சுருவாங்க. கோபமா வரும். ஆனா, வெளியே காட்ட முடியாது'' என்கிறார் லயோலா கல்லூரி மாணவரான சரவணன்.
வேலைக்குச் செல்லும் இடங்களிலும் இப்போது புதுவிதமான பிரச்னை முளைத்திருக்கிறது. ''பொதுவா, ரிசப்ஷனிஸ்ட் மாதிரியான வேலைகளுக்குத்தான் அழகான பெண்களை எடுப்பாங்க. ஆனா, பி.பி.ஓ, சாஃப்ட்வேர் பூம் வந்த பிறகு திறமையை மட்டும் பயன்படுத்தக்கூடிய வேலைகளுக்கும் சிவப்புத் தோல் பெண்கள்தான் வேணும்னு கேட்கிற நிலைமை வந்திருக்கு. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்கில் 80 சதவிகித மார்க் வாங்கின பொண்ணு நான். நானும் என் தோழியும் பிரபலமான சாஃப்ட்வேர் கம்பெனி நடத்திய இன்டர்வியூக்குப் போயிருந்தோம். அவங்க வெச்ச எல்லா டெஸ்ட்லயும் நான் பாஸ். ஆனா, வேலைக்கு அவங்க செலெக்ட் பண்ணினது என் தோழியை. அவளுக்கே அது பெரிய ஆச்சர்யம். அவள் செலெக் டானதுக்கு ஒரே காரணம், அவ ளோட சிவப்பு நிறம்தான்!'' என்கிறவர், தற்போது வேறொரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார்.
70-களின் ஆரம்பத்தில் நம் நாட்டில் நுழைந்த ஃபேர்னஸ் க்ரீம்கள் இப்போது பட்டிதொட்டிஎல்லாம் பரவிவிட்டன. அதிலும் இன்னொரு சுவாரஸ்யமான தகவல், தென்னிந்தியாவில் ஃபேர்னஸ் க்ரீம்களின் விற்பனை ஒப்பீட்டு அளவில் சற்று குறைவுதான் என்கிறது சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வு. காரணம், க்ரீம்களைப் பூசி என்றைக்கோ சிகப்பாவதைவிட, பவுடர் பூசி அன்றைய அவசரத்துக்கு அழகாகிவிடலாம் என்ற நினைப்பு தான் இங்கு அதிகமாம்.
''சினிமா நாயகர்களான ரஜினி முதல் விஷால் வரை கறுப்பாக இருந்தால் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், த்ரிஷா, அசின், நயன்தாரா என நாயகிகளை வெள்ளையாக மட்டுமே பார்க்க விரும்புகிறோம். பெண் குழந்தை பிறந்துவிட்டாலே பதறிப்போகும் நம் சமூகத்தில், அந்தக் குழந்தை கறுப்பாகப் பிறந்துவிட்டால், இன்னும் வேதனை. பெண்ணின் 'கறுப்பு'க்காக வரதட் சணை சில மடங்குகள் அதிகமாகக் கொடுக்க வேண்டுமே என்கிற பதற்றம் அப்போதே தொற்றிக்கொள்கிறது பெற்றோருக்கு. ஆனால், கறுப்பான தங்கள் பையனுக்கோ, சிவப்பான பெண்தான் வேண்டும் என விரும்புகிறார்கள். எல்லா மேட்ரிமோனியல் விளம்பரங்களிலும் சாதி, மதத்துக்கு அடுத்தபடி யாக 'சிவப்பான, வெள்ளையான' பெண்கள் வேண்டும் என்ற பகிரங்க அறிவிப்புகளே இதற்குச் சாட்சி!'' என்கிறார் பெண்ணியச் சிந்தனையாளர் வ.கீதா.
கறுப்பாக இருப்பவர்கள் பியூட்டி பார்லர்கள் மூலம் சிவப்பாக மாறிவிடலாம் என்பதில் எந்த அளவு சாத்தியங்கள் உண்டு?
''நிறைய பேருக்கு நிஜம் புரியலை. கறுப்பாக இருப்பவர்கள், வெள்ளை யாக மாற முடியாது. இப்போ இத்தாலியில் இருந்து புதுசா 'That so pure white' என்ற பெயரில் ஸ்கின் வொயிட்னிங் ஸ்பிரே ட்ரீட்மென்ட் வந்திருக்கு. எந்த இடத்தில் கறுப்பு அதிகமாக இருக்கோ, அந்த இடத்தில் ஸ்பிரே செய்துவிடுவார்கள். அவரவருடைய தோலின் கறுமையைப் பொறுத்து இந்த ட்ரீட்மென்ட் முடிக்க 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகும். குறைந்தபட்சம் 22 ஆயிரம் ரூபாய் செல வாகும். இதுகூட கருமையைச் சற்றே குறைப்பதற்கான ட்ரீட்மென்ட்தான்!'' என்கிறார் அழகுக்கலை நிபுணர் 'நேச்சுரல்ஸ்' வீணா.
டெர்மடாலஜிஸ்டுகள் கறுப்பைச் சிவப்பாக மாற்றிவிடுவார்களா..? பதில் சொல்கிறார் டெர்மடாலஜிஸ்ட் மாயா வேதமூர்த்தி... ''சாத்தியமே இல்லை. கறுப்பாக இருந்த சினிமா நடிகைகள் சிகிச்சை எடுத்துக்கொண்டு சிவப்பாக மாறிவிட்டார்கள். அதுபோல தானும் மாற வேண்டும் என்று சிலர் வருவதுண்டு. பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு வந்தது போல வெண்குஷ்டம் (Vitiligo) வந்தால்தான் நிறம் மாறுவது சாத்தியம். ஜாக்சனுக்கு வந்தது நோய் என்பதுகூடப் பலருக்குத் தெரியாது. அவரின் உடல் முழுக்க நிறம் மாறிவிட்ட பிறகு, சில இடங்களில் பழைய கறுப்பு நிறம் திட்டுத் திட்டாக இருந்திருக்கிறது. அந்த இடங்களிலும் நோயைப் பரவச் செய்தார்கள். இதுதான் நடந்த உண்மை!''
இன்று உலகம் முழுவதும் கறுப்பு கொண்டாடப்படும் நிறமாகி வருகிறது. கறுப்பர்களுக்கான இசை, இலக்கியம், சினிமா எனப் பிரபலமாகிறது. கறுப்பு மாடல்களும் கறுப்பினப் பாடகர்களும் உலகம் முழுக்க எக்கச்சக்க ரசிகர்களை அள்ளுகிறார்கள்.
ஆனால், இங்கேயோ ஊடகங்களில் கறுப்பு மோசமாக நிராகரிக்கப்படும் நிறமாக இருக்கிறது. ''மாடலிங் செய்ய வந்த ஆரம்ப வருடங்களில் ஒரு மாடலுக்குரிய அழகு, உடல்வாகு, உயரம் இருந்தும் கறுப்பு என்ற காரணத்துக்காகவே நிராகரிக்கப்பட்டேன். என்னுடைய தன்னம்பிக்கையால் முன்னுக்கு வந்திருக்கிறேன். கிங்ஃபிஷர் மாடல் ஹன்ட்டில் தேர்வானேன். 'மிஸ். பெங்களூரு ப்ரெய்ன் வித் பியூட்டி'யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனாலும், என்னால் நினைத்த மாதிரி பெரிய அளவுக்கு வர முடியவில்லை'' என்கிறார் தமிழ்நாட்டிலிருந்து பெங்களூரு சென்று செட்டிலான லஷ்மிப்ரியா.
''இயல்பைத் தொலைப்பதும் கறுப்பை வெறுப்பதும் நமது சமூகத்தைப் பிடித்த சாபம். கறுப்பு என்பது தாழ்வானது என்ற கருத்து சமூக, பண்பாட்டுத் தளத்தில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளது. மதம், சாதி இவற்றுக்கு அடுத்தபடியாக கறுப்பு என்பதும் புறக்கணிப்புக்கு உள்ளாக வேண்டியது என்கிற கருத்து ஆழமாக இங்கே ஊன்றியிருக்கிறது. மேற்கு உலகத்தில் கறுப்பினம் புறக்கணிக்கப்பட்டபோது 'பிளாக் மூவ்மென்ட்' உண்டாகி வெற்றி கண்டது போல, இங்கேயும் உருவாக வேண்டும்!'' என ஆவேசப்படுகிறார் 'தலித் முரசு' பத்திரிகையின் ஆசிரியரான புனித பாண்டியன்.
பட்டிமன்றத்தின் ஸ்டார் கறுப்பு ஐயா, சாலமன் பாப்பையா சொல்வது என்ன..?
''எங்க வீட்டுக்காரம்மா எப்பவாச்சும் செல்லமா என்னை கறுப்பு ராசான்னுதான் கூப்பிடுவாக. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவில் ஆரம்பிச்சு, அண்ணா, காமராஜர் வரைக்கும் நம்மளை அணைச்சவங்களும் ஆண்டவங்களும் கறுப்புதானேய்யா. இன்னிக்கு இருக்குற இளைஞர்களுக்கு வெவரமும் வாழ்க்கைத் தரமும் எவ்வளவோ வளர்ந்துருச்சு. இதுல கறுப்பு, சேப்பு, வெள்ளைன்னு கலர் பிரிக்கிறதை அவுகளே சீக்கிரம் ஒழிச்சுருவாக. வாங்கய்யா... கறுப்பை வணங்குவோம்!''
மகப்பேறு மருத்துவர் ப்ரியா செல்வராஜிடம் சில கேள்விகள்...
''குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?''
''குங்குமப்பூவில் சில சத்துக்கள் உள்ளன என்பது உண்மை. மற்றபடி பிறக்கும் குழந்தை சிவப்பாக இருப்பது என்பது முழுக்கப் பெற்றோரின் மரபணு சார்ந்த விஷயம். கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவது ஒரு நம்பிக்கை சார்ந்த செயல் என்பதால் குங்குமப்பூவைப் பாலில் கலந்து சாப்பிடலாமே தவிர, பிறக்கும் குழந்தையைச் சிவப்பாக மாற்றும் வல்லமையெல்லாம் இதைச் சாப்பிடுவதால் வந்துவிடாது.''
''கறுப்பு அப்பாவுக்கும் கறுப்பு அம்மாவுக்கும் பிறக்கும் குழந்தை கறுப்பாகத்தான் இருக்குமா?''
''அப்படிச் சொல்ல முடியாது! மூன்று தலைமுறைகளைக் கணக்கில் வைத்துப் பார்த்தால்தான் அந்தக் குழந்தை கறுப்பாகப் பிறக்குமா இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். பிறக்கும் குழந்தையின் தாத்தா-பாட்டி மாநிறமாகவோ, சிவப்பாகவோ இருந்தால், அந்தக் குழந்தை சிவப்பாகப் பிறக்கவும் வாய்ப்பு இருக்கலாம். அது போலவே, கறுப்பான அப்பாவுக்கும் சிவப்பான அம்மாவுக்கும் பிறக்கும் குழந்தையும் கறுப்பாகவும் இருக்கலாம்!''
''ஐ.வி.எஃப். முறையில் பிறக்கும் குழந்தைகளைச் சிவப்பாகப் பிறக்கவைக்க முடியுமா?''
''குழந்தையே பிறக்காத நிலையில் இருப்பவர்கள் எந்தக் குழந்தையாவது பிறந்தால் போதும் என்றுதான் நினைப்பார்களே தவிர, 'எனக்கு சிவப்பான குழந்தையை உருவாக்கிக் கொடுங்கள்' என்று கேட்பதில்லை. மற்றவர்களிடமிருந்து உயிரணுக்களைத் தானம் பெறுபவர்கள் பின்னாளில் பிரச்னை ஏதும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தங்களைப் போன்ற தோற்றம் உள்ளவர்களிடமிருந்தே தானம் பெற விரும்புகிறார்கள். கறுப்பாக இருக்கும் தம்பதிக்கு டெஸ்ட் டியூப் பேபி முறையில் பிறக்கிற குழந்தை வெள்ளையாக இருப்பது முரண்பாடாகத்தானே இருக்கும்?!''
டாக்டர் மாயா வேதமூர்த்தியிடம் சில கேள்விகள்...
''கறுப்பாக இருப்பவர்களுக்குத் தோல் நோய்கள் வராதா?''
''கறுப்பாக இருப்பவர்களின் தோல் 'திக்'காக இருக்கும் என்பதால், அவர்களுக்குத் தோல் தொடர்பான நோய்கள் எதுவும் வருவதில்லை என நினைக்கிறார்கள். கறுப்புத் தோலில் மெலனின் அதிகமாக இருப்பதால் சூரியனிலிருந்து வரக்கூடிய புற்றுநோய்க்குக் காரணமான புற ஊதாக் கதிர்களிலிருந்து ஒரு குடை பாதுகாப்பது உண்மை. மற்றபடி தோல் வியாதிகள் எல்லோருக்கும் பொதுவானவைதான்!''
''தோலில் படிந்த கருமையை நீக்க என்னென்ன சிகிச்சைகள் இருக்கின்றன?''
''மைக்ரோ பிக்மென்டேஷன், டெர்மோரோலர், கெமிக்கல் ப்ளீச்சிங் என்பன சில முக்கியமான சிகிச்சைகள். தலைக்கு டை போடுவதால் ஏற்படும் பக்க விளைவால் சிலருக்கு முகம் கறுத்துப் போயிருக்கும். அதே போல ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்வதாலும் முகம் கருக்கலாம். இதுபோன்ற வெவ்வேறு காரணங்களால் தோலில் ஏற்பட்ட கறுப்புத் தழும்புகள், வடுக்கள் போன்றவற்றை நீக்குவதற்காக சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறார்கள். பத்து சதவிகிதப் பேர்தான் கறுப்பு நிறத்தைக் குறைப்பதற்கான சிகிச்சைக்கு வருகிறார்கள். அவர்களின் ஒரிஜினலான நிறத்தை என்ன செய்தாலும் மாற்ற முடியாதென தெளிவாக எடுத்துச் சொன்ன பிறகே மேற்கொண்டு சிகிச்சை அளிப்போம்!''

Monday, March 21, 2016

கன் முன்னே நான் இருக்க ,
கவலை என்ன கண்மணி  நீ கண்ணீர் விட